சேலம்: சேலத்தில் தேமுதிகவின் மாநில மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது. மாலை 5 மணிக்கு மேல் கட்சியின் நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். இரவில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசுகிறார். கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் கேப்டன் என்று பேசினார். இதன் மூலம், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளது.
தேமுதிகவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சேலம் தேமுதிக மாநில மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது.
கட்சி தொடங்கிய பின்னர் பெரிய அளவில் மாநாடு எதையும் நடத்தவில்லை தேமுதிக. மாறாக வருகிற தேர்தல்களில் எல்லாம் தனியாக போட்டியிடுவதும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவற்றை நடத்துவதிலும் கட்சியை வழிகாட்டி வந்தார் விஜயகாந்த்.
தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை ஆணி்த்தரமாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவு நிரூபித்து விட்டார் விஜயகாந்த். இதையடுத்து அவருடன் கூட்டணி சேர கட்சிகளுக்குள் கடும் போட்டா போட்டி.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியினரை உற்சாகமூட்டும் வகையில் வீரபாண்டியாரின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில் பிரமாண்ட மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஜயகாந்த்.
நாமக்கல் சாலையில் வீராசாமிபுதூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது. கட்சித் தலைவர் விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
அப்போது மனைவி பிரேமலதா, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை 5 மணிக்கு மேல் கட்சி நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். பேச்சாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக சாடிப் பேசினர். ஒருவர் கூட அதிமுகவையோ, முந்தைய அதிமுக ஆட்சிகள் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிலும் ஒருவர் அதிமுகவிடம் எத்தனை தொகுதிகளைக் கேட்டாலும் அது தரும். எனவே கேப்டன், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று பேசியதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு விஜயகாந்த் வந்து விட்டதை உணர முடிகிறது.
இறுதியாக விஜயகாந்த் பேசவுள்ளார். அப்போது அவர் கூட்டணி குறித்து அவர் முறைப்படி அறிவிப்பார்.
இதன் காரணமாக தேமுதிகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் சேலத்தில் குவிந்துள்ளனர். மாநாட்டையொட்டி சேலமே தேமுதிகவினர் முற்றுகையால் திமிலோகப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் டிஜ்ட்டல் பேனர்கள் வெளுத்துக் கட்டி வருகின்றன. எங்கு பார்த்தாலும் விஜயகாந்த்தின் பளிச் சிரிப்பு போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்படுகின்றன.
மாநாட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு [^] போடப்பட்டிருந்தாலும் கூட, அதிமுக பாணியில், தேமுதிகவும், சிறப்புப் பாதுகாப்புப் படையை தனது தொண்டர்களைக் கொண்டு அமைத்துள்ளது.
Source:http://thatstamil.oneindia.in
No comments:
Post a Comment