Friday, February 4, 2011

தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி-விஜயகாந்த்

சென்னை: எல்லா அரசியல் கட்சிகளையும் போலவே தானும் ஒரு சராசரி அரசியல் தலைவர்தான் என்பதை நிரூபிக்க ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த். பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று பதத்தை அவர் நிரூபிக்க ஆரம்பித்துள்ளார். கூட்டணியே கிடையாது என்று வாய் கிழியப் பேசி வந்த விஜயகாந்த் இப்போது தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என்று படு வீராப்பாக பேசியுள்ளார்.

தமிழகத்தின் இன்னொரு பாமக என்பதை தேமுதிக நிரூபிக்க ஆரம்பித்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும் கூட்டணியில் இடம் பெறுவது பாமகவின் வாடிக்கை. எங்கு ஆதாயம் கிடைக்குமோ, எங்கு போனால் வெற்றி கிடைக்குமோ அங்கு போவது அக்கட்சியின் கொள்கையாகும். அந்த ரேஞ்சுக்கு இப்போது விஜயகாந்த்தும் மாறி வருகிறார்.

இதுவரை கூட்டணியே கிடையாது, மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று பேசி வந்தவர் விஜயகாந்த். ஆனால் இப்போது தேமுதிக இடம் பெறும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று பேசியுள்ளார்.

சேலத்தில் மாநாடு போட்டு திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக அவர் சாடியபோதே, அதிமுகவுடன் அவர் கூட்டணி வைக்கப் போவது கிட்டத்தட்ட மறைமுகமாக உறுதியானது. ஆனாலும் மாநாட்டின் இறுதியில் கூட்டணி குறித்து அவர் அறிவிக்கவில்லை.இதனால் தொண்டர்கள் ரொம்பவே குழம்பிப் போனார்கள்- விஜயகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் மட்டுமல்லாமல், அவரது புரியாத பேச்சாலும்.

தேமுதிக, அதிமுக இடையே கூட்டணி உறுதியாகி விட்டபோதிலும், பணப் பிரச்சினை தொடர்பாக இழுபறியாக உள்ளதாம். அதாவது தேமுதிகவின் தேர்தல் செலவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்,அதில் பஞ்சாயத்து ஏற்பட்டிருப்பதால்தான் கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் தேமுதிகவில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில், விஜயகாந்த் பேசுகையில்,

ரேஷன் கடைகளில் விற்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு விலையில் ரூ.10 குறைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு விலையைக் குறைக்காதது ஏன்? தேர்தல் வருகிறது என்பதால் பருப்பு விலையைக் குறைத்ததாகக் கூறி மக்களை ஏமாற்ற கருணாநிதி முயல்கிறார். இதேபோல் தக்காளி, வெங்காயம் விலையைக் குறைக்காதது ஏன்?

இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாகக் கூறி கருணாநிதி டெல்லிக்குச் செல்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டுக்கு அவர் செல்லவில்லை. இப்போது அவர் மாநாட்டுக்காகச் செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காகவே தில்லி செல்கிறார்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவோ, தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளுக்காகவோ முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றதில்லை. இதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதற்காக டெல்லி சென்றார். இப்போதும், அதுபோலவே தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக டெல்லி செல்கிறார்.

முதல்வர் பதவியில் இருப்பதைவிட, தி.மு.க.வின் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பதையே பெரிதாகக் கருதுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

இனி அவர் தி.மு.க.வின் தலைவராக மட்டும்தான் இருக்க முடியும். மீண்டும் அவரால் முதல்வராக முடியாது. வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பற்றி சேலம் மாநாட்டில் தொண்டர்களின் கருத்தைக் கேட்டறிந்தேன். மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளேன். யாருடன் கூட்டணி என்பது பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பேன்.

மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்பேன். கூட்டணிக்காக தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கிறதோ, அந்த கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக அமையும் என்றார் விஜயகாந்த்.

தொண்டர்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன் என்கிறார். மறுபக்கம், தேமுதிக இடம் பெறும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்கிறார். இவரது தலைமையில் கூட்டணி அமைந்தால் அது அடகு வைப்பதாக ஆகாது. மற்ற கூட்டணியில் போய்ச் சேர்ந்தால் அதற்குப் பெயர் என்ன என்பதை விஜயகாந்த்தான் விளக்க வேண்டும்.


English summary
Actor-Politician Vijayakanth has said that an alliance will be successfull only with the inclusion of DMDK. In Chennai he said that, I will not mortgage my cadres to any party. But if an alliance has to win then it should have DMDK with it, he said. Earlier Vijaykanth was telling that DMDMK will not forge alliance with anybody except people. Now he has changed his stance for the polls.

Source: http://thatstamil.oneindia.in

2 comments:

Kannan said...

A good post.

vicky said...

Mr.vijayakanth u have taken a good decision......go Ahead...MGR PUGAL VALGA......

Captain Vijaykanth will Become the Chief Minister of TAMIL NADU?